குளத்தில் குப்பை கொட்டுவதா? மக்கள் போராட்டம்!
செய்தி: கு.அசோக்,
கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம் சேத்துவண்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஜே. நகரில் குளத்தின் அருகே குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.ஜே. நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. எப்போதும் நீர் நிறைந்திருக்கும் இந்தக் குளத்தை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி காலங்களில் சிலை கரைப்பது, மீன்பிடிப்பது, கோடை காலங்களில் குளிப்பது உள்ளிட்டவற்றுக்கு இந்த நீர்நிலையை மக்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள இந்தக் குளத்தின் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த சில ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட வேண்டும், குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும், குப்பை கொட்டப்படும் இடத்தை சுற்றி பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க உள்ளதாகவும் தெரிவித்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

admin
