போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு: விவசாயிக்கு 15 ஆண்டுகள் சிறை – நீதிபதி அதிரடி தீர்ப்பு

போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு: விவசாயிக்கு 15 ஆண்டுகள் சிறை – நீதிபதி அதிரடி தீர்ப்பு

செய்தி: ஜி.குலசேகரன்,
ராணிப்பேட்டை மாவட்டம், ஆக.25: பனப்பாக்கத்தில் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட விவசாயிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தாவூத் அம்மாள் உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (63). விவசாயியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காசிம் யாசிப் என்பவரிடமிருந்து 15 சென்ட் நிலத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜெயராமன் 15 சென்ட் நிலத்துடன், காசிம் யாசிப் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான மேலும் 5 சென்ட் நிலத்தையும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த 5 சென்ட் நிலமும் தனக்கு சொந்தமானது எனக் காட்டும் வகையில், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணத்துடன் போலியான ஆவணத்தை இணைத்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே, யாசிப் சகோதரர் கூட்டுப்பட்டாவில் உள்ள 5 சென்ட் நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அந்த இடத்திற்கு ஏற்கனவே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய மின் இணைப்பு வழங்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த யாசிப் சகோதரர், கூட்டுப்பட்டா மற்றும் நில ஆவணங்கள் குறித்து விசாரித்தபோது, ஜெயராமன் போலியான ஆவணம் தயாரித்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக யாசிப் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆவணங்களில் முறைகேடு இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு ராணிப்பேட்டை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கும், காவேரிப்பாக்கம் போலீஸாருக்கும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வழக்கு விசாரணை ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கு நீதிபதி தாவூத் அம்மாள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஜெயராமன் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்தது நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து ஜெயராமனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தாவூத் அம்மாள் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி ஜெயராமனை போலீஸார் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.