. “வாங்காத கடனை ஏன் செலுத்த வேண்டும்?” வங்கி முன்பு 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி – போலீசார் தடுத்து நிறுத்தினர்!

. “வாங்காத கடனை ஏன் செலுத்த வேண்டும்?”  வங்கி முன்பு 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி – போலீசார் தடுத்து நிறுத்தினர்!

ஜி.குலசேகரன்,

வேலூர் அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு, வாங்காத கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கி வலியுறுத்தியதாக கூறி, இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் கடந்த 2023-ம் ஆண்டு 16 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் குழுவில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த மகளிர் குழு மூலம் வேலூர் அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியில் ரூ.20 லட்சம் கடன் பெறப்பட்டதாகவும், அந்தத் தொகை குழுவில் உள்ள 16 உறுப்பினர்களுக்கும் தலா ரூ.1.25 லட்சம் வீதம் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், சில உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை எனவும், அதில் சர்மிளாவும் ஒருவர் எனவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சர்மிளா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வங்கியில் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்துமாறு சர்மிளாவிடம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த சர்மிளா, “நாங்கள் வாங்காத பணத்திற்கு எதற்காக பணம் செலுத்த வேண்டும்?” எனக் கேட்டு, தனது இரண்டு குழந்தைகளுடன் அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை சுதாரித்துக் கொண்ட போலீசார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி, மகளிர் குழு கடன் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.