20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: ஆம்பூரில் பிச்சை எடுத்து பொதுமக்கள் போராட்டம்!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் பிச்சை எடுத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாங்கி ஷாப் பகுதியில் உள்ள இமாம் நகர், பேஷ்மா நகர், ஸ்டார் சிட்டி, திருமால்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், குடிநீர் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதனால் தங்களது அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, பாங்கி ஷாப் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் பிச்சை எடுத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்துடன், இப்பகுதி தொடர்பான நகராட்சி அதிகாரிகளின் பொறுப்பற்ற அணுகுமுறையும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால், பொதுமக்களை திரட்டி சட்டப்பேரவை முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கைக்கு அதிகாரிகள் இனியாவது செவிசாய்ப்பார்களா என்பதே கேள்வி.

admin
