வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் நோயாளியின் தந்தை வெளியேற்றப்பட்டதாக புகார்!அனைத்து தளங்களிலும் குடிநீர் வசதி இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
செய்தி: ஜி. குலசேகரன்,
வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையை பாதுகாப்புப் பணியாளர்கள் தரதரவென வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல் கல்பூண்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் 9 வயது மகன் அருணாச்சலம் வைரஸ் காய்ச்சல் காரணமாக வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனுக்கு தேவையான பொருட்கள் மற்றும் குடிநீர் வாங்கிக்கொண்டு, பார்வையாளர் நேரத்தில் மருத்துவமனைக்கு சதீஷ்குமார் சென்றதாக கூறப்படுகிறது.
லிப்டில் அதிக கூட்டம் இருந்ததால், சில ஆண்டுகளுக்கு முன்பு காலில் ராடு பொருத்தப்பட்டிருந்த நிலையிலும் படிக்கட்டு வழியாக 3-வது மாடிக்கு சென்றதாகவும், அப்போது அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தன்னை ஒருமையில் பேசி கீழே இறங்குமாறு கூறி வெளியேற்றியதாகவும் சதீஷ்குமார் புகார் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் பார்வையாளர் அனுமதி இருப்பதாக தெரிவித்தும் பாதுகாப்புப் பணியாளர்கள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதீஷ்குமார் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 தளங்களிலும் குடிநீர் இல்லை என புகார்
இதனிடையே பென்ட்லெண்ட் மருத்துவமனையில் உள்ள 7 தளங்களிலும் குடிநீர் முறையாக கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், மருத்துவமனையின் அனைத்து தளங்களிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin
