காதலியை திருமணம் செய்து தரக் கேட்ட இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய தாய்! காவேரிப்பாக்கம் அருகே பரபரப்பு – போலீசார் விசாரணை!

காதலியை திருமணம் செய்து தரக் கேட்ட இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய தாய்! காவேரிப்பாக்கம் அருகே பரபரப்பு – போலீசார் விசாரணை!

செய்தி: கு.அசோக்,

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமீம் (36). கணவர் இல்லாமல் தனது மகன் மற்றும் 18 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உத்திரம்பட்டு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் முத்தீஸ்வரர் தெருவில் வாடகை வீட்டில் தனது பிள்ளைகளுடன் குடியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒச்சேரி அடுத்த ஆயர்பாடி ரோட்டுத் தெருவைச் சேர்ந்த லோகேஷ் கண்ணன் (19), காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் தமீமின் மகளும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லோகேஷ் கண்ணன் இரவு நேரத்தில் தனது காதலியை பார்க்க காவேரிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, காதலியின் தாயிடம் தனது காதலியை திருமணம் செய்து தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தமீம் சமையலறைக்குச் சென்று கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ச்சி, பின்னர் கொதிக்கும் எண்ணெயை லோகேஷ் கண்ணன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் லோகேஷ் கண்ணனின் முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறிய நிலையில், சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து லோகேஷ் கண்ணன் நேற்று இரவு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காதலியை திருமணம் செய்து தரக் கேட்ட இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது