காதலனுடன் இருந்த இளம்பெண்ணை கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை! ராணிப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
செய்தி: கு.அசோக்,
ராணிப்பேட்டை: காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் பாலாற்றங்கரை அருகே அரசுக்குச் சொந்தமான நவலாக் தென்னைப் பண்ணை அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு காதல் ஜோடி தனிமையில் பேசிக்கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் காதல் ஜோடியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் காதலனை கண்மூடித்தனமாக தாக்கியதுடன், இளம்பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி சிறிது தூரம் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிப்காட் போலீசார், வழக்கை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர்.விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரைக்கரை பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான பார்த்திபன், சிவராஜ் மற்றும் ராஜா ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தேன்மொழி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், முதல் குற்றவாளியான பார்த்திபனுக்கு ரூ.1.40 லட்சமும், மற்ற இருவருக்கும் தலா ரூ.1.30 லட்சமும் அபராதம் விதித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
