மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி முறைகேடு புகார்… 4 மாதத்தில் விசாரணை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு – வேலூர் மத்திய சிறையிலும் சிக்குமா?
செய்தி: அ. கார்த்திகேயன்,
மதுரை:-மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் தொடர்பாக போலி கணக்குகள் தயாரித்து சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில், விசாரணையை விரைவுபடுத்தி நான்கு மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த எழுதுபொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், கைதிகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் போலியான கணக்குகள் தயாரிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறைவாசிகள் உரிமை மையத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான பி. புகழேந்தி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, விரிவான விசாரணையை முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, நான்கு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை தொடரவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மதுரை மத்திய சிறை தொடர்பான இந்த விவகாரம் தற்போது கவனம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் பிற மத்திய சிறைகளிலும் இதுபோன்ற நிர்வாக மற்றும் கணக்கு நடைமுறைகள் முறையாக பரிசோதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக வேலூர் மத்திய சிறையிலும் இதுபோன்ற முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? அங்கு கணக்குகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டால் உண்மை வெளிவருமா?என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
வேலூர் மத்திய சிறையிலும் ஆய்வு நடந்தால் உண்மை வெளிவருமா?

admin
