“மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை இல்லை; சட்டமன்றத்தின் பொன்னான நேரம் வீண்!” – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

“மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை இல்லை; சட்டமன்றத்தின் பொன்னான நேரம் வீண்!” – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

செய்தி: ஜி. குலசேகரன்

வேலூர், ஆக. 31:

தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேச முன்னுரிமை அளிக்காமல், அவையின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவதாகவும், பல்வேறு துறைகளின் கேள்விகளுக்கும் குறிப்பிட்ட சில அமைச்சர்களே தொடர்ந்து பதிலளிப்பதாகவும் .தி.மு.. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டமன்றம் உண்மையான சட்டமன்றமாக நடைபெறவில்லை என்றும், சினிமாவில் சட்டமன்றக் காட்சிகள் எவ்வாறு காட்டப்படுகிறதோ அதுபோல் இருப்பதாகவும் விமர்சித்தார்.

மேலும், பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், மானியக் கோரிக்கைகளின்போது துறை சார்ந்த அமைச்சர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் குறிப்பிட்ட சில அமைச்சர்களே அதிகமாக பதில் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே .தி.மு..வின் விருப்பம் என்றும், அரசு அதனை சிறப்பாக செயல்படுத்தும் எனக் கூறியுள்ளது; அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆட்சியின் நிதி நிர்வாகம் குறித்தும் அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பாக, தாம் கார் வாங்கப் போவதில்லை என்றும், பதவிக்காலம் முடிந்த பிறகு அரசு வாகனத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டிய நிலை இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்பிலும் ஆளுங்கட்சிக்கு சாதகமான அணுகுமுறை இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சபாநாயகர் சட்டமன்றத்தை நீண்ட நேரம் நடத்தியது பாராட்டுக்குரியது என்றாலும், அதில் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.