ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி: 2.38 லட்சம் விவசாயிகளுக்கு புதிய சலுகை - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
ம.பா.கெஜராஜ்,
சென்னை: தமிழகத்தில் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38 ஆயிரத்து 264 விவசாயிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கெனவே ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழுமையான தள்ளுபடியும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஜூலை 31-ம் தேதி வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
இந்த நிலையில், விவசாய சங்கங்களின் கோரிக்கையைத் தொடர்ந்து கூடுதல் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.75 ஆயிரம் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100 சதவீதம் முழுமையாகவும், ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், ரூ.1 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும்.
இதன்மூலம் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38 ஆயிரத்து 264 விவசாயிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இதனால், ஏற்கெனவே வழங்கப்பட்ட தள்ளுபடிக்கு மேலாக ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும், மொத்தமாக சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
அமைச்சரின் பேச்சுக்கு முதல்வர் விஜய் ‘சாரி’ கேட்டார்
சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, அமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான். அவர் சார்பில் நான் சாரி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
Writing

admin
