சென்னை திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை! 67 ரயில்கள் ரத்து!

 சென்னை திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை! 67 ரயில்கள் ரத்து!

ஜி.சாந்தகுமார்,

 நடப்பு வடகிழக்கு பருவமழை சீசனில் முதல் புயலாக மோன்தா உருவாகியுள்ளது. இது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் தகவலின் படி, வங்கக்கடலில் வடக்கு ௹ வடமேற்கு திசையில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

 ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு - தென்கிழக்கு திசையில் 280 கி.மீ தூரத்திலும், காக்கிநாடாவில் இருந்து தெற்கு - தென்கிழக்கில் 360 கி.மீ தூரத்திலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கில் 410 கி.மீ தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூரில் இருந்து தெற்கு ௹ தென்மேற்கில் 610 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

 இன்று இரவு மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும்.

சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் விடுமுறை

 அதி கனமழை கொட்டி தீர்க்கும் என்பதால் ஆந்திரா, ஒடிசா, புதுச்சேரி மாநிலங்களில் பள்ளிகள், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள வட சென்னை பகுதியிலும் அதிக மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 மீனவர்களும் கடலுக்கு செல்ல்வில்லை. இந்நிலையில் நேற்று இரவு மோன்தா புயல் மழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 28, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக ஆந்திராவில் இன்றும் நாளையும் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.