ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்! தாராபுரம் பிரச்சாரப் பேச்சால் அரசியல் சர்ச்சை: அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
செய்தி: ம.பா. கெஜராஜ்,
கோவை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் நிர்மல் குமார், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசிய விதம் அவரது உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாக விமர்சித்தார்.
மேலும், தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்யபாமா குறித்து வயதான நிலையிலும் உருவக்கேலி செய்யும் வகையில் பேசியிருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்காக ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
தேர்தலில் வாக்குகளுக்காக தங்கள் தரப்பில் பணம் கொடுக்கப்படுவதில்லை என்று தெரிவித்த அமைச்சர், வாக்குக்குப் பணம் கொடுத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியிருப்பது தவறான தகவலின் அடிப்படையிலானது என்றும் கூறினார்.
அத்தகைய சம்பவம் நடைபெற்றதை நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராகப் போராட்டம் நடத்திய ஒரே கட்சி தவெகதான் என்று குறிப்பிட்ட அவர், இந்த இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவின் தற்போதைய நிலை, எதிர்காலத் தேர்தல் கூட்டணி மற்றும் மின்சார விநியோகம் தொடர்பாகவும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் குறித்துப் பேசப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, திமுக, தவெக மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருவது அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கங்கள் வெளியானால் அவையும் பிரசுரிக்கப்படும்.

admin
