“தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்!” உளுந்தூர்பேட்டை மாநாட்டில் திருமாவளவன் சூளுரை!

“தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்!” உளுந்தூர்பேட்டை மாநாட்டில் திருமாவளவன் சூளுரை!

ம.பா.கெஜராஜ்,

கள்ளக்குறிச்சி: “வரும் காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக பேசிய அவர், கடந்த 77 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் இனப் பாகுபாடு, அரசியல் உரிமை மறுப்பு, நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும் என்ற அச்சம் தமிழர்களிடையே நிலவி வருவதாக தெரிவித்தார்.

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இலங்கையின் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து தமிழக அரசியல் குறித்து பேசிய திருமாவளவன், “நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். வரும் காலத்தில் விசிக தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும். இத்தனை காலம் நாம் ஆளும் கட்சியோடு கூட்டணி வைத்தோம். இன்று ஆளும் முதல்வர் ஜோசப் விஜய்யோடு கூட்டணி வைத்திருக்கிறோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும். விசிகவும் ஆளும் கட்சியாக பரிணமிக்கும்” என்று தெரிவித்தார்.

விசிக தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளதாக தெரிவித்த அவர், அனைவரும் பாதுகாப்பாக கலைந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.