பிகிலை விட்டு ஓடிய திகில்! தாராபுரத்தில் தவெகவுக்கு வெற்றி முன்னோட்டம்; மதுராந்தகத்திலும் விசில் சத்தம்! ஸ்டாலின் பேச்சால் வெடித்த சர்ச்சை – விஜய்யின் பதிலடியால் சூடுபிடித்த தேர்தல் களம்!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ஏற்கெனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது அதே தொகுதிகளில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இதனால், கட்சி மாறிய வேட்பாளர்களை மீண்டும் வெற்றி பெறச் செய்வார்களா அல்லது அதிமுக தனது தொகுதிகளை மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தாராபுரத்தில் தவெகவுக்கு சாதகமான களநிலை!
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து விஜய் மேற்கொண்ட பிரசாரம், அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் வருகைக்குப் பின்னர் தவெகவின் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களிடையே தவெகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அங்குள்ள நிருபர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது சத்தியபாமா குறித்து தெரிவித்ததாகக் கூறப்படும் விமர்சனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சத்தியபாமா கட்சி மாறியது தொடர்பாக ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்கள், தவெக தரப்பில் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளன.
சத்தியபாமாவின் தோற்றத்தைக் குறிவைத்து விமர்சித்ததாகக் கூறி, விஜய் ஸ்டாலினுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களை அரசியல் மேடைகளில் தவிர்க்க வேண்டும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தவெக தரப்பில் தமிழக டிஜிபி மற்றும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்டாலினின் விமர்சனத்தைத் தொடர்ந்து, தாராபுரத்தில் திமுகவுக்கு ஆதரவாக அமைய வேண்டிய பிரசாரம், தவெகவுக்கு சாதகமான அரசியல் விவாதமாக மாறியுள்ளது. தாராபுரத்தில் திமுக இதற்கு முன்பு வெற்றி பெற்றதாகக் கூற முடியாத நிலையில், அந்தத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலை திமுகவுக்கு இல்லை. மாறாக, அங்கு வெற்றி பெறுவதற்கான முயற்சியில்தான் திமுக ஈடுபட்டுள்ளது.
தற்போதைய களநிலவரப்படி, அந்த முயற்சிக்கு எதிராக தவெகவுக்கு தெளிவான முன்னிலை உருவாகியுள்ளது.
செங்கோட்டையனின் களப்பணி; அதிமுக வாக்கு வங்கியில் மாற்றம்!
தாராபுரத்தில் தவெகவின் தேர்தல் பணிகளில் செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டிருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.
அதேபோல், அதிமுகவின் பாரம்பரிய ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் தவெக பக்கம் திரும்பியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
தவெகவின் விசில் சின்னம், விஜய்யின் பிரசாரம், சத்தியபாமாவின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகியவை இணைந்து தாராபுரத்தில் வலுவான தேர்தல் முன்னோட்டத்தை உருவாக்கியுள்ளன. உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்குச்சாவடி அளவிலான அமைப்பு ஆகியவற்றிலும் தவெக தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
திமுகவும் தனது அமைப்பு வலிமை மற்றும் கூட்டணி ஆதரவின் மூலம் வெற்றி பெற முயற்சித்து வருகிறது. ஆனால், ஸ்டாலினின் பிரசாரத்தில் எழுந்த சர்ச்சை மற்றும் தவெகவுக்கு கிடைத்துள்ள கள ஆதரவு ஆகியவை திமுகவின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் தாராபுரத்திற்கு இரண்டாவது தடவையாக வந்து தொகுதி முழுக்க ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார் விஜய். முன்னதாக அவர் தாராபுரத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்து வாக்கு சேகரித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
தாராபுரத்தில் கூட்டணி வாக்குகள் பிகிலுக்கு திரளும் நிலை!
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு கிடைத்துள்ளது.
கடந்த தேர்தலில் திமுகவுடன் இருந்த இந்தக் கட்சிகளின் ஆதரவு வாக்குகள் தற்போது சிதறாமல் பிகில் சின்னத்துக்கே செல்லும் நிலை உருவாகியுள்ளது.
அதேபோல் பாமகவின் மறைமுக ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு இருப்பதாகவும் பேசப்படுகிறது.
இவைகளுடன் தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவேற்றி வரும் தேர்தல் வாக்குறுதிகள் தற்போது வாக்குகளாக வந்து சேரும் நிலையம் ஏற்பட்டிருக்கிறது.
ஆக இந்த வாக்குகள் தவெகவுக்கு கிடைப்பது தாராபுரத்தில் தேர்தல் கணக்கை முற்றிலும் மாற்றக்கூடியதாகக் கருதப்படுகிறது. திமுகவுடன் இருந்த கூட்டணி வாக்குகள் தவெக பக்கம் திரள்வது, திமுகவின் வெற்றி வாய்ப்பை மேலும் குறைத்து, பிகிலுக்கு வெற்றிப் பாதையைத் திறந்துள்ளது.

வேட்பாளர்கள் யார் யார்?
தாராபுரம் (தனி):
-
தமிழக வெற்றிக் கழகம் – பி. சத்தியபாமா
-
அதிமுக – கே. பானுமதி
-
திமுக – எஸ். சுகன்யா
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – லட்சுமணன்
-
நாம் தமிழர் கட்சி – மு. கார்த்திகா
மதுராந்தகம் (தனி):
-
தமிழக வெற்றிக் கழகம் – கே. மரகதம் குமரவேல்
-
அதிமுக – கணிதா சம்பத்
-
திமுக – ஐ. பரந்தாமன்
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – சுகந்தி
-
நாம் தமிழர் கட்சி – கோ. ஜானகிராமன்
தேர்தல் இறுதிப் பட்டியல் குறித்த செய்திகளின்படி, மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகத்தில் விசில் சத்தம் அதிகரிக்கிறது!
மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் தவெக சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் கனிதா சம்பத்தும், திமுக சார்பில் ஐ. பரந்தாமனும் போட்டியிடுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
மரகதம் குமரவேலின் முந்தைய வெற்றியும், தொகுதியில் அவருக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கும் தவெகவுக்குச் சாதகமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. விஜய்யின் பிரசாரம் மதுராந்தகத்திலும் கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டீக்கடை விசிட் பற்றி எல்லாம் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி சற்று தூக்கல் தான்.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அங்குள்ள நிருபர்கள் மூலம் கிடைக்கும் களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், கடந்த தேர்தலில் திமுகவுடன் இருந்த விசிக, மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகளும் தற்போது பிகில் சின்னத்துக்கு திரளும் நிலை காணப்படுகிறது.
இந்த வாக்குகள் சிதறாமல் தவெகவுக்கு கிடைத்தால், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலின் வெற்றி உறுதியாகும் என களநிலவரம் காட்டுகிறது.
அதிமுக தனது பழைய வாக்கு வங்கியை மீட்டெடுக்க முயற்சித்தாலும், விஜய்யின் செல்வாக்கு, மரகதம் குமரவேலின் தனிப்பட்ட ஆதரவு மற்றும் கூட்டணி வாக்குகளின் திரள்வால் அந்த முயற்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
திமுகவும் தனது வேட்பாளரின் அரசியல் அனுபவம் மற்றும் கட்சி அமைப்பை நம்பி களமிறங்கியுள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தவெகவுக்கே சாதகமாக உள்ளது.
இரு தொகுதிகளிலும் பூத் கேப்சரிங் முயற்சியைத் தடுக்க வேண்டும்!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் பூத் கேப்சரிங் நடத்த எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையமும் காவல்துறையும் முன்கூட்டியே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் உள்ளது.
ஒவ்வொரு வாக்காளரும் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள், மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் விரைவான புகார் நடவடிக்கை ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மொத்தத்தில், தாராபுரத்தில் பிகிலுக்கு இருந்ததாகக் கூறப்பட்ட திகில் முற்றிலும் மாறி, தவெகவுக்கு சாதகமான களநிலை உருவாகியுள்ளது. மதுராந்தகத்திலும் விசில் சத்தம் வெற்றியை நோக்கி நகர்கிறது.
கடந்த தேர்தலில் திமுகவுடன் இருந்த கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் பிகில் சின்னத்துக்கு திரள்வதால், இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கே வெற்றி உறுதியாகும் நிலை காணப்படுகிறது.
கடந்த தேர்தல் வாக்குகள் என்ன சொல்கின்றன
2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளையும், தவெக வேட்பாளர் 62,090 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 59,838 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 7,194 ஆகும்.
தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகளையும், திமுக வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளையும், தவெக வேட்பாளர் கௌரி சித்ரா 46,438 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அதிமுகவின் வெற்றி வித்தியாசம் 16,727 வாக்குகளாக இருந்தது.

admin
