“உனது துணிச்சலை நீதிமன்றம் எப்போதும் நினைவில் கொள்ளும்” – பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமிக்கு நீதிபதியின் உருக்கமான கடிதம்

“உனது துணிச்சலை நீதிமன்றம் எப்போதும் நினைவில் கொள்ளும்” – பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமிக்கு நீதிபதியின் உருக்கமான கடிதம்

செய்தி: ம.பா.கெஜராஜ்,

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் துணிச்சலுடன் சாட்சியம் அளித்த நிலையில், அவரது தைரியத்தைப் பாராட்டி டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரஞ்சனி ரங்கா எழுதியுள்ள கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு சிறுமிக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நீதிமன்றத்தில் துணிச்சலுடன் சாட்சியம் அளித்தார்.

வழக்கு விசாரணையின்போது, தனக்கு தீங்கு செய்த நபர் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டும் என்று சிறுமி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு நீதிபதி ரஞ்சனி ரங்கா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், சிறுமியின் குழந்தைப் பருவத்தை நீதிமன்றத்தால் மீண்டும் வழங்க முடியாது என்றாலும், அவர் நீதிமன்றத்தில் தெரிவித்த வார்த்தைகள் கவனமாகக் கேட்கப்பட்டதாகவும், அவரது துணிச்சல் நினைவில் வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, கல்வியில் கவனம் செலுத்தி, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் நீதிபதி தனது கடிதத்தில் ஊக்கமளித்துள்ளார்.

நீதிபதியின் இந்தக் கடிதத்தை டெல்லி உயர்நீதிமன்றமும் பாராட்டியுள்ளது.

மேலும், நீதிபதியின் கடிதத்தையும், நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ.10.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும் சிறுமியிடம் நேரடியாகச் சேர்க்குமாறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் அவரது அடையாள விவரங்கள் வெளியிடப்படவில்லை.