விஜய் வருகையால் பரபரப்பான தாராபுரம்! தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சாலை வலம்; வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு!

விஜய் வருகையால் பரபரப்பான தாராபுரம்! தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சாலை வலம்; வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு!

செய்தி: ம.பா.கெஜராஜ்,

திருப்பூர்: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாராபுரத்தில் சாலை வலம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 2) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதற்காக கோவை வந்தடைந்த அவர், தாராபுரம் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார்.

தாராபுரம் பேருந்து நிலையப் பகுதியில் தொடங்கிய சாலை வலம், அமராவதி சிலை, பெரியகடை வீதி உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக நடைபெற்றது. சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, தாராபுரம் - உடுமலை சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

ஏற்கெனவே விஜய் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது மு.க.ஸ்டாலினின் வருகையும் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.