நெல்லை கவின் கொலை வழக்கு: சார்பு ஆய்வாளர் தம்பதிக்கு நிவாரணம்! வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை
செய்தி: ம.பா.கெஜராஜ்,
தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், சுர்ஜித்தின் பெற்றோர்களான சார்பு ஆய்வாளர் தம்பதி சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அப்படி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கவின் காதலித்ததாக கூறப்படும் நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுவில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் தாங்கள் இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தன. இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், உறவினர் ஜெயபால் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் கவின் கொலை வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவருக்கும் ஒரே மாதிரியான நிவாரணம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் தம்பதிக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.

admin
