கொடைக்கல் ஆவின் அருகே ஆபத்தான பெரும்பள்ளம்! தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம் – உடனடி நடவடிக்கை கோரிக்கை!

கொடைக்கல் ஆவின் அருகே ஆபத்தான பெரும்பள்ளம்! தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம் – உடனடி நடவடிக்கை கோரிக்கை!

செய்தி:கு அசோக், 
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகே சாலையோரம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கல் பகுதியில் சோளிங்கர்–வாலாஜா நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், திண்டிவனம்–நகரி ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில், நெடுஞ்சாலையோரம் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலைக்கும் பள்ளத்துக்கும் இடையே சுமார் 3 அடி மட்டுமே இடைவெளி இருப்பதாகவும், குறிப்பாக வளைவு பகுதியில் வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அருகில் உள்ள கல்குவாரிகளில் இருந்து எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளும் இந்த சாலையில் அதிக அளவில் சென்று வருகின்றன.

இப்பகுதியில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததுடன், வேகத்தடை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் உடனடியாக பேரிகார்டுகள் அமைத்து, எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

வளைவு பகுதியில் போதிய மின்விளக்கு வசதியையும் ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதியில் விபத்து ஏற்படும் முன்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.