மாற்றுத்திறனாளி இலவச பஸ் பாஸ் ஏற்கப்படாததால் பாதியில் இறக்கிவிட்டார்களா? விபத்தில் முதியவர் பலி!

மாற்றுத்திறனாளி இலவச பஸ் பாஸ் ஏற்கப்படாததால் பாதியில் இறக்கிவிட்டார்களா? விபத்தில் முதியவர் பலி!

செய்தி: கு அசோக்,

வேலூர் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை செல்லாது எனக் கூறி அரசு பேருந்தில் இருந்து இருவர் பாதியிலேயே இறக்கிவிடப்பட்டதாகவும், பின்னர் சாலையோரம் அமர்ந்திருந்த அவர்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. குடியாத்தம் சீவூர் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இருவரும் நண்பர்கள்.

இவர்கள் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்று இரவு வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து அதிகாலை சுமார் 3 மணியளவில் குடியாத்தம் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளனர்.

பேருந்து புறப்பட்ட பின்னர், பயணச்சீட்டு தொடர்பாக நடத்துநரை அணுகிய இருவரும் தங்களிடம் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை காட்டியதாக கூறப்படுகிறது.

அந்த அட்டைகள் செல்லாது எனக் கூறி, கொணவட்டம் அரசு பேருந்து பணிமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருவரையும் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவரும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கல்வெட்டின் மீது அமர்ந்திருந்ததாக தெரிகிறது. அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, கல்வெட்டு மீது அமர்ந்திருந்த இருவர் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ராஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த சதாசிவம் படுகாயமடைந்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை தொடர்பான விதிமுறைகள் என்ன, சம்பந்தப்பட்ட பயண அட்டை செல்லுபடியாகாததற்கான காரணம் என்ன, இருவரையும் பாதியிலேயே பேருந்தில் இருந்து இறக்கிவிட்டது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தின் நடைமுறை என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பயண அட்டையை ஏற்றுக்கொண்டு, பயணிகளை குடியாத்தம் வரை அழைத்துச் சென்றிருந்தால் இந்த உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்குமா என்ற கேள்வியும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.