தேவாலய கட்டுமான பணியில் கூரை சரிந்து விபத்து! பலர் காயம்! உயிர் பலி? மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை!

செய்தி: ஜி.குலசேகரன்,

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மண்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிஎஸ்ஐ தேவாலயத்தின் மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்றபோது, கட்டுமானத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தற்போதைய தகவலின்படி சுமார் 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை மற்றும் சித்தூர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழகம்–ஆந்திர எல்லைப் பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளதால், எந்த மாநிலத்தின் நிர்வாக மற்றும் காவல்துறை அதிகார எல்லைக்குள் சம்பவ இடம் வருகிறது என்பது குறித்தும் ஆரம்பகட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், உயிர்களைக் காப்பாற்றும் பணியில் இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேவாலய கட்டுமானப் பணிக்கு உரிய அனுமதிகள் பெறப்பட்டிருந்ததா? கட்டுமான வரைபடம் மற்றும் கட்டிட அனுமதி விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? கட்டுமானப் பணியில் தகுதி மற்றும் அனுபவம் பெற்றவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்களா?

பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்து முறையான ஆய்வு செய்யப்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், கட்டுமானப் பணிகளில் உரிய அனுபவமும் தொழில்நுட்பத் தகுதியும் இல்லாதவர்களுக்கு சிபாரிசு அல்லது நிர்வாகத் தலையீட்டின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால், அதுகுறித்தும் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த தேவாலயம் சிஎஸ்ஐ நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில், கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரர் யார், அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியின் தன்மை என்ன, கட்டுமானப் பணியை கண்காணித்த பொறியாளர்கள் யார், சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெறப்பட்ட அனுமதிகள் என்ன என்பதையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது வெறும் விபத்தாக மட்டும் பார்க்கப்படாமல், கட்டுமானப் பணியில் விதிமீறல் அல்லது அலட்சியம் இருந்ததா என்பது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதன் உண்மையான எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களின் முழுமையான விவரங்களை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

விபத்துக்கான உண்மையான காரணம், கட்டுமான அனுமதிகள், கட்டுமானத் தரம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு ஆகியவற்றை முழுமையாக விசாரித்து, தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகம், ஒப்பந்ததாரர் அல்லது அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டால், அதுவும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு வெளியிடப்படும்Accident during church construction: Roof collapses! Many injured! Fatalities? District administration launches intensive probe!