அடங்காத திமுகவினர் சபாநாயகரை முற்றுகை! —சபையை நடத்தவிடாமல் அமளி... கூண்டோடு வெளியேற்றம்!

அடங்காத திமுகவினர் சபாநாயகரை முற்றுகை! —சபையை நடத்தவிடாமல் அமளி... கூண்டோடு வெளியேற்றம்!

!ம.பா.கெஜராஜ்,

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியது. பொதுத்துறை, அயலகத் தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் மிசா விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, சட்டப்பேரவைக்கு என்று மரபுகள் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் முதல்வர் கண்ணியமாக பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் அவை மரபை மீறி பேசியதாகவும், நீதி விசாரணையில் உள்ள விவகாரங்களை அவையில் பேச அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்க்காரியா கமிஷன் கூறிய கருத்துகள் குறித்தும் எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.

ஆதாரம் இல்லாமல் முதல்வர் விஜய் பேசிய கருத்துகள் அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை”

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியபோது திமுகவினர் ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி என்றும், சர்க்காரியா கமிஷன் தொடர்பான விவகாரம் ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் தனது அனுமதியின்றி திமுகவினர் பதாகைகளை காட்டியது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய சபாநாயகர், “நேற்று முதல்வர் விஜய் பேசிய எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுகவினர் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதற்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், இரண்டு நாட்களாக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வரும் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்,

இதையடுத்து, திமுக கொறடா எ.வ.வேலுவுக்கு சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்குவதாகவும், அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

ஆனால், திமுகவினர் தொடர்ந்து அவையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

சபாநாயகர் உத்தரவின்பேரில் அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேற்றினர்.

இதனால் தமிழக சட்டப்பேரவையில்  பாபரபரப்பான சூழல் நிலவியது என்பது சுட்டிக்காட்ட பட வேண்டியதாக உள்ளது.