சட்ட நிபுணரும் அவரது தோழியும் மாடு திருடி சிக்கினார்! களவு போனவைகளை ஆந்திர சந்தையில் மீட்ட போலீசார்! ரிமாண்ட் செய்யப்படுவார்களா என மக்கள் கேள்வி!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி கிராமத்தில் இரண்டு பசுமாடுகள் திருடப்பட்ட சம்பவத்தில், வழக்கறிஞர் ஒருவரையும் அவரது பெண் தோழி அம்முவையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்றாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனின் மகள் கீர்த்தி, தனது சொந்த நிலத்தில் கொட்டகை அமைத்து பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி இரவு வழக்கம்போல் இரண்டு பசுமாடுகளையும் கொட்டகையில் கட்டி வைத்திருந்த நிலையில், மறுநாள் காலையில் பார்த்தபோது மாடுகள் காணாமல் போயிருந்தன.
இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், மாடுகள் திருடிச் செல்லப்பட்ட விதம் தொடர்பான முக்கிய காட்சிகள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் வழக்கறிஞர் ஒருவரையும் அவரது பெண் தோழி அம்முவையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையின்போது, மாடுகளை திருடிச் சென்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சந்தையில் விற்பனை செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் ஆந்திர மாநிலத்திற்குச் சென்று அங்கு விற்பனை செய்யப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகளையும் மீட்டு, மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் போலீசார் கைது செய்யாமல் அனுப்பி வைத்திருப்பது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாடு திருட்டு தொடர்பாக இன்னும் சில விசாரணைகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியுள்ளது. அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மாடு திருட்டு சம்பவத்தை கண்டுபிடிப்பதில் சிசிடிவி கேமரா பதிவுகள் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஒருவரும் அவரது பெண் தோழியும் மாடு திருட்டு வழக்கில் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
