சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய சத்யபாமா – பல்வேறு கட்சியினர் பாராட்டு!

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய சத்யபாமா – பல்வேறு கட்சியினர் பாராட்டு!

செய்தி: ம.பா.கெஜ ராஜ்,

சென்னை:தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இல்லாத நேரத்தில் மாற்று பேரவைத் தலைவராக பொறுப்பேற்று, அவையை சுமார் 15 நிமிடங்கள் சிறப்பாக வழிநடத்திய தவெக எம்எல்ஏ சத்யபாமாவுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான சத்யபாமா, மாற்று பேரவைத் தலைவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் நேற்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவர் அவையை வழிநடத்தினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை வரலாற்றில் பெண் ஒருவர் அந்த இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்துவது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு சத்யபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவரது வாழ்த்தை சத்யபாமா எழுந்து நின்று ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அவைக்கு திரும்பியதும், சத்யபாமா தனது பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து இருக்கையில் இருந்து எழுந்தார்.

இதுகுறித்து பேசிய ஜே.சி.டி. பிரபாகர், சத்யபாமா அவையை சிறப்பாக வழிநடத்தியதாக பாராட்டியதுடன், இதுபோன்ற தற்காலிக பொறுப்புகள் வழங்கப்படுவது உறுப்பினர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.

சட்டப்பேரவை வரலாற்றில் பெண்கள் முக்கிய பொறுப்புகளை வகித்த சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யபாமா பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.