“ஆளுங்கட்சியின் தவறான பிம்பத்தை ஊடகங்கள்தான் தோலுரிக்க வேண்டும்!” – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!
செய்தி:- ஜி.குலசேகரன்,
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். ஆனால், தொலைக்காட்சிகள் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்களிடம் தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. இதன் உண்மை நிலையை ஊடகங்கள்தான் தோலுரித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழக மக்களை எளிதில் ஏமாற்ற முடியாது என்றார்.
மேலும், சமூக நீதிக் கொள்கைகள் மற்றும் 1921-ல் முத்தையா முதலியார் கொண்டு வந்த கம்யூனல் ஜி.ஓ.வின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டபோது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் விளைவாக அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கொள்கைகளில் பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் நிலையில், தற்போதைய அரசு அவர்களின் பெயர்களைத் தவிர்த்து வருவதாக குற்றம்சாட்டினார். பெரியார், அம்பேத்கர் படங்களை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
“விஜய் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரலாம்” என பேசுவது எல்லையில்லாத கற்பனை. கற்பனைக்கு எல்லையே கிடையாது; ஐ.நா. சபைக்கே தலைவராக வருவார் என்று கூட சொல்லிக் கொள்ளட்டும் என ஆர்.எஸ்.பாரதி கிண்டலாகக் குறிப்பிட்டார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் பேசியதற்கு அந்தப் பகுதி இளைஞர்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தை முறையாகப் பாட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
மூன்று பைல்களை முதலமைச்சரிடம் கொடுத்தும் அவை திறக்கப்படவில்லை என்றால், பொதுமக்களுக்கு முதலமைச்சர் தவறான தகவல் தெரிவிக்கிறார் என வழக்குத் தொடரலாம் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “துரைமுருகன் சட்டமன்றத்தில் நீண்ட நாள் அனுபவம் உள்ளவர். அவர் கூறியிருப்பது சரியாக இருக்கும். சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்றார்.

admin
