அதிகாரி இல்லாத வேலூர் ஆயுதப்படை... எழுத்தர் கையில் அதிகாரமா? காவலர்களிடையே அதிருப்தி!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், வேலூர் டிட்டர் லைன் பகுதியில் தமிழக காவல்துறையின் வேலூர் மாவட்ட ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஆயுதப்படைக்கு தற்போது இன்ஸ்பெக்டர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் அதிகாரிகள் இல்லாத சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஆயுதப்படையில் எழுத்துப் பணிகளை கவனித்து வரும் முருகன் என்ற பெயர் கொண்ட ஒருவர், காவலர்களிடம் அதிகாரம் செலுத்துவதாகவும், தமக்கு ஒத்துப்போகும் காவலர்களுக்கு எளிதான பணிகளையும், தம்முடைய விருப்பத்திற்கு உடன்படாதவர்களுக்கு கடினமான பணிகளையும் வழங்குவதாகவும் சில காவலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவலர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பணிச்சார்ந்த நடவடிக்கைகளில் முறைகேடாக செயல்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என காவலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் வேலூர் ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பட்டை ரவி, பணிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கியதாகவும், காவலர்களிடம் பாரபட்சமின்றி நடந்து கொண்டதாகவும் அங்கு பணியாற்றியவர்கள் நினைவு கூருகின்றனர். அதேபோல், அப்போது பணியாற்றிய டிஎஸ்பியும் சிறப்பாக நிர்வாகம் செய்ததாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஆயுதப்படையில் உரிய கண்காணிப்பு இல்லாததால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருவதாக காவலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
எனவே, வேலூர் மாவட்ட காவல் நிர்வாகம் ஆயுதப்படையின் பணிப்பிரிவுகள், காவலர்களுக்கு வழங்கப்படும் டூட்டி, பணியிட ஒதுக்கீடுகள் மற்றும் எழுத்தர் பிரிவின் செயல்பாடுகள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து, குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை விசாரிக்க வேண்டும் என்பதே காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
