ஒடுக்கத்தூர் அருகே வெடிகுண்டு பீதி!

ஒடுக்கத்தூர் அருகே வெடிகுண்டு பீதி!

செய்தியாளர்: ஜி. குலசேகரன்,

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அருகேயுள்ள மலைகிராமமான சின்னபுதூரில் விவசாய நிலத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் கிராம மக்கள் மத்தியில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டுள்ளது.

சின்னபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து விவசாய நிலத்தில் வைக்க வெங்கடேசன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று அவர் நாட்டு வெடிகுண்டுகளுடன் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்துள்ளது. இதில் வெங்கடேசன் பலத்த காயமடைந்து அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த அவரை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெங்கடேசன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். டி.எஸ்.பி. நந்தகுமார் தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக அகற்றினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைக்க சென்றபோது, வெங்கடேசன் எடுத்துச் சென்ற ஒரு நாட்டு வெடிகுண்டு எதிர்பாராதவிதமாக வெடித்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நாட்டு வெடிகுண்டுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன, அவற்றுக்கு தேவையான பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன, வனவிலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாய நிலத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி ஒருவர் படுகாயமடைந்ததுடன், மேலும் 18 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சின்னபுதூர் மலைக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.