மனைவியை அழைத்துச் செல்ல சென்ற கணவருக்கு கத்தி வெட்டு! ஆற்காடு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பரபரப்பு – ஒருவர் கைது
கு.அசோக்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, மனைவியை அழைத்துச் செல்ல சென்ற கணவரை காய் வெட்டும் கத்தியால் பல்வேறு இடங்களில் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு பூபதி நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் பாலாஜி (31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கனிமொழி (29) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், பாலாஜியின் சித்தப்பா மகன் லோகேஷுக்கும் கனிமொழிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு கனிமொழி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.
இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் கனிமொழியை போலீசார் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மீண்டும் ஒரு மாதத்திலேயே தனது இளைய மகளை அழைத்துக் கொண்டு கனிமொழி வெளியேறியதாக தெரிகிறது.
இதற்கிடையே, லோகேஷ் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறும் பாலாஜிக்கு கனிமொழி தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கனிமொழி தங்கியிருந்த வீட்டிற்கு பாலாஜி சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த லோகேஷ், காய் வெட்டும் கத்தியால் பாலாஜியை பல்வேறு இடங்களில் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லோகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin
