14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி அவசியம்! கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க கிராம சபையில் விழிப்புணர்வு!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

வேலூர்: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம், வேலூர் வெங்கடாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வெங்கடாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுரேஷ், வட்டாட்சியர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.ஒன்றிய குழு தலைவர் அமுதா உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர்.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், குழந்தைகள் நலன், பெண்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் குழந்தைகள் நலத்துறை அதிகாரி பேசுகையில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு இன்னல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்தும், இத்தகைய பாதிப்புகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட துறைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி!

இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியர் சித்ரா பங்கேற்று பெண்களின் உடல்நலம் குறித்துப் பயனுள்ள விழிப்புணர்வுக் கருத்துகளை வழங்கினார்.

குறிப்பாக, பெண்களைப் பாதிக்கக்கூடிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதில் HPV (Human Papillomavirus) தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். 14 வயதிலேயே சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்துவது எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று எடுத்துரைத்தார்.

மேலும், இந்தத் தடுப்பூசியின் விலை சுமார் ரூ.8,000 வரை இருக்கக்கூடும் என்றும், அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, கிராமப்புறங்களில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்துவது குறித்து சுகாதாரத் துறையினரை அணுகி உரிய ஆலோசனை பெற்று பயன்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயம் மற்றும் அரசின் வேளாண் திட்டங்கள் தொடர்பான பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

கிராமத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் ஊராட்சியின் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிப் பணியாளர் பாஸ்கர் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, நோய்த் தடுப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இக்கூட்டம் பொதுமக்களிடையே பயனுள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில்  தீர்க்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த புகார் மனுக்களை கொடுத்தனர். 

இதில் பஞ்சாயத்து அலுவலர் பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தின் போது உறுதிமொழி ஏற்கப்பட்டது.