விவசாயிகள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!திமுக எம்எல்ஏக்கள் கொதிப்பு!

விவசாயிகள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!திமுக எம்எல்ஏக்கள் கொதிப்பு!

செய்தி: ம.பா.கெஜ ராஜ்,

சென்னை:விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து கடந்த ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், ஜனநாயக முறையில் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்கான உரிமையை அரசு மதிக்கும் என தெரிவித்தார்.

2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், அந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டங்களின் காரணமாக அவர்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் மனிதநேய மற்றும் ஜனநாயக அடிப்படையில் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் அறிவித்தார்.

விவசாயிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும், இந்த நடவடிக்கை மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.