ரூ.1 கோடி இழப்பீடு கோரி சவுக்கு சங்கர் மீது அருண் ஐ.பி.எஸ். வழக்கு!
செய்தி :ஜி.சாந்தகுமார்,
அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகக் கூறி அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.அருண் ஐ.பி.எஸ். வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.1 கோடிக்கும் மேல் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சவுக்கு சங்கர் தொடர்ந்து தனது யூடியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளுடன் காணொளிகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மன உளைச்சல், உணர்வுரீதியான துயரம், தொழில்ரீதியான பாதிப்பு மற்றும் தனிநபர் உரிமை மீறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை குறிவைத்து அவதூறான கருத்துகள், குற்றச்சாட்டுகள் மற்றும் மறைமுகக் குறிப்புகளை வெளியிடுவதற்கும், மறுபதிவு செய்வதற்கும், பரப்புவதற்கும் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
தனது பெயர், புகைப்படம், பதவி, முதலெழுத்துகள், புனைப்பெயர் உள்ளிட்ட எந்தவொரு அடையாளத்தையும் பயன்படுத்தி தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தன்னைப் பற்றி அவதூறான உள்ளடக்கம் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகள், ட்வீட்டுகள் மற்றும் காணொளிகளை நீக்குமாறு யூடியூப் மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
வழக்கு தொடர்பாக ஏற்பட்ட செலவுகளை சவுக்கு சங்கரே ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும், வழக்கு முடிவடையும் வரை தமக்கு எதிரான அவதூறான பதிவுகள் மற்றும் காணொளிகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அருண் ஐ.பி.எஸ். தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

admin
