ரூ.1-க்கு BSNL சிம் கார்டு: வேலூர் கோட்டத்தில் புதிய சலுகைகள் அறிவிப்பு!

ரூ.1-க்கு BSNL சிம் கார்டு: வேலூர் கோட்டத்தில் புதிய சலுகைகள் அறிவிப்பு!

கு.அசோக்,

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

வேலூர் டிட்டர் பகுதியில் உள்ள BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் பொதுமேலாளர் ராஜு மற்றும் இணைப் பொதுமேலாளர் அசோக் நாயக் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், BSNL நிறுவனம் தொடர்ந்து மக்கள் சேவை நோக்குடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL சிம் கார்டை வெறும் ரூ.1-க்கு பெற்றுக்கொள்ளும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 22 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்கிற்காக 30 தமிழ் தொலைக்காட்சி சேனல்களை கட்டணமின்றி பார்க்கும் வசதியும் வழங்கப்படுவதாக கூறினர்.

BSNL வேலூர் கோட்டம் 2025-26 நிதியாண்டில் ரூ.98.93 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது முந்தைய காலகட்டத்தை விட 6 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்தனர். 2026-27 நிதியாண்டில் ரூ.360 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

BSNL நிறுவனம் தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் சிறப்பான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருவதாகவும், 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மென்பொருள் மேம்படுத்தல் பணிகள் முடிவடைந்ததும் விரைவில் BSNL 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.