குப்பையில் வீசப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: வாணியம்பாடியில் மீண்டும் நிறுவப்பட்ட ஜீவானந்தம் சிலை!

குப்பையில் வீசப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: வாணியம்பாடியில் மீண்டும் நிறுவப்பட்ட ஜீவானந்தம் சிலை!

ஜி. குலசேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் பார்வையில் இருந்து வந்த சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட தோழர் ஜீவானந்தத்தின் சிலை, மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக அகற்றப்பட்டு அருகிலுள்ள மசூதி அருகே வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜீவானந்தத்தின் சிலை குப்பையில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், சிலையை உரிய மரியாதையுடன் மீண்டும் அதே பகுதியில் நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் பராமரிப்பின்றி இருந்த ஜீவா சிலை குறித்து வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.

மேலும், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தோழர் ஜீவானந்தத்தின் 119ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகத் தன்மை கொண்ட ஜீவானந்தம், தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தை வளர்த்த முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

ஜீவா சிலை மீண்டும் நிறுவப்பட்டுள்ளதால், வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் அவரது நினைவு தொடர்ந்து நிலைத்திருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.