“பா” பெயரில் ரவுடி டீம்! சிறுபான்மை மக்கள் அச்சம்! ஆள் சேர்க்கும் படலத்தால் சைதாப்பேட்டையில் பரபரப்பு!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம்,வேலூர், சைதாப்பேட்டை பகுதியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை குறிவைத்து ஒரு குறிப்பிட்ட ரவுடி குழு செயல்பட்டு வருவதாகவும், அந்தக் குழுவில் 14 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் கூறப்படும் தகவல்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
“பா” என்ற பெயரில் செயல்படுவதாகக் கூறப்படும் இந்தக் குழுவில் தற்போது சுமார் 75 பேர் வரை இருப்பதாகவும், புதிதாக இளைஞர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அச்சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சின்னதாக தொடங்கிய தகராறு ஒன்று வன்முறையாக மாறியதாகவும், ஒருவரை கல்லால் தாக்கி, கத்தியால் வெட்டியதில் அவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்கள் தனிப்பிரிவு காவலர் ஒருவரால் மிரட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமன்றி சம்பந்தப்பட்ட காவல் நிலைய பெண் அதிகாரி பாதிக்கப்பட்டவர்களிடம், “நீங்கள்தான் அவர்களை தாக்கியிருக்கிறீர்கள்; அவர்களும் புகார் கொடுத்திருக்கிறார்கள்” என்று கூறி அழுத்தம் கொடுத்ததாகவும், இதன் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வந்ததால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாது என்று பெண் காவல் அதிகாரியால் கூறப்பட்டதாகவும், ஆனால் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பின்னரும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, காவல் நிலையத்தின் தனிப்பிரிவைச் சேர்ந்த “ராஜா” என்பவர் இந்தக் குழுவினருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு சிறுபான்மை தலைவர்களில் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் அவருக்கு விருப்பமான உணவு வழங்கப்படுவதாகவும் கூறப்படும் தகவல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மேற்படி நபர்கள் வலியுறுத்துகின்றனர்.
“பா” குழுவினர் காவல்துறையில் சிலருக்கு மட்டுமின்றி பலருக்கும் சப்ளை & சர்வீஸ் உடன் செயல்படுவதாகவும், இதன் காரணமாக அவர்களுக்கு காவல் நிலையத்தில் செல்வாக்கு இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இக்குழுவினர் இளைஞர்களுக்கு சமூக நலன், கல்வி, தொழில், ஒழுக்கம் போன்றவற்றை கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக, கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவது, தகவல் கிடைத்தவுடன் கூட்டம் கூடி பறந்தோடி சென்று தாக்குதலில் ஈடுபடுவது, மாமூல் வசூல் செய்வது, காவல் நிலையத்தில் எதிர்ப்புகார் கொடுப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறப்படும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அச்சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், “எங்கள் சமூகத்தில் தொழுகை, உழைப்பு, நேர்மையான வியாபாரம், பெரியவர்களுக்கு மரியாதை, அன்பு, ஈகை போன்றவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஆனால் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்தக் குழுவின் செயல்பாடுகள் எங்களைப் போன்ற பெரியவர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன” என்று சொன்னார்
வேலூர்,சைதாப்பேட்டை பகுதியில் பல மசூதிகள், தர்காக்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் உள்ள நிலையில், இத்தகைய குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்தால் பொதுமக்களின் அமைதியும் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நிலவுகிறது.
மேலும், சைதாப்பேட்டை பகுதியில் சட்டவிரோத லாட்டரி மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள், சட்டவிரோத தங்கும் விடுதிகள், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் போலவே உருவ ஒற்றுமையில் இருக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவளும் இங்கு சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு இந்தப் பா குரூப்பு தான் பாடிகார்டாக உள்ளனர்
இவற்றை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்து மாநில உளவுத்துறையினரும் விசாரித்து தகவல்களை சேகரித்துள்ளதாக உள்ளூர் தரப்பில் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? எதிர்ப்புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன? காவல்துறையினருக்கும் இந்தக் குழுவினருக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா? தனிப்பிரிவு போலீசார் தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா? என்பது குறித்து வேலூர் மாவட்ட காவல் உயர் அதிகாரி அவர்கள் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சைதாப்பேட்டை பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த பா ரவுடி டீம் வேலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், மாமூல் வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, இந்தப் பா ரவுடி டீமை ஒழித்துக் கட்டிசட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா?
இது குறித்த உண்மை தன்மையை அறிய வேலூர் வடக்கு காவல் நிலையத்தின் சட்டம் & ஒழுங்கு இன்ஸ்பெக்டர் திருமதி.ஜெயலட்சுமி அவர்களிடம் பேசினோம். என்ன என்று உடனடியாக "விசாரிக்கிறேன் சார்" என ஒற்றை வரியில் விளக்கம் சொன்னார்.

admin
