அரசுத்துறையில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்! வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் விஜயகுமரன் பேட்டி
!செய்தி: ஜி.குலசேகரன்,
தமிழகம் முழுவதும் அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமரன் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜோஷி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர் தீனதயாளன், கல்வித்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த சேகர், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் விஜயகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் விஜயகுமரன் கூறியதாவது,
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய வட்டங்களில் சார்பு நீதிமன்றம் மற்றும் சார்பு கருவூலம் அமைக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
அணைக்கட்டு, கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டு ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் அருகே பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், நவீன இணையதள வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான 5 சதவீத வரம்பை நீக்கி, மீண்டும் பழைய நிலையான 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
மேலும், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். குறிப்பாக சத்துணவு மற்றும் கிராமப்புற செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள் காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அவர்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, பணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் செப்டம்பர் 26-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் மாநில அரசிடம் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறினால், போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்

admin
