கத்தி, இரும்புக் கம்பிகளுடன் இளைஞர்கள் மோதல்! வாணியம்பாடி அருகே 7 பேர் படுகாயம் – சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ!
செய்தி: ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய கொல்லகுப்பம் பகுதியில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரிய கொல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்த கிஷோர்குமார், பரத், அஜய் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் பெரிய கொல்லகுப்பம் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது கொல்லகுப்பம் நுழைவாயிலில் உள்ள காணாற்று அருகே சென்றபோது, சுப்பராயன்கோவில் பகுதியைச் சேர்ந்த அஜித் உள்ளிட்ட சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பெரிய கொல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி, குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது லேசாக மோதியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பராயன்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெரிய கொல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சுப்பராயன்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கத்தி மற்றும் இரும்புக் கம்பிகளுடன் பெரிய கொல்லகுப்பம் பகுதிக்குச் சென்று அங்கிருந்த இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
.இந்த தாக்குதலில் சுமார் 7 பேர் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, இளைஞர்கள் கத்தியுடன் சுற்றித் திரிந்து மோதலில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

admin
