“இன்றைய முதல்வர்... வருங்கால பிரதமர்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
செய்தி: டி.அண்ணாதுரை,
இன்றைய முதல்வர்... வருங்கால பிரதமர்... அதை நோக்கி பயணிப்போம்” என்று சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் உள்ள ஏஏஏ பொறியியல் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்தன. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம் முன்னிலை வகித்தார். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், “தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வழங்குவோம். வேலைக்காக யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது.
இளைஞர்கள் தங்களது தகுதியை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
ஊழல் இல்லாத ஆட்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுவரை 323 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் 5.93 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 13,434 நிறுவனங்கள் மூலம் 58 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் நல்வழியில் சென்று ஊழல் இல்லாத ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழகத்தின் இன்றைய முதல்வர்... வருங்கால பிரதமர்... அதை நோக்கி பயணிப்போம்” என்றார்.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், தமிழகத்தில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும், புதிய தொழில் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்.

admin
