100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகார் – ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பணித்தளப் பொறுப்பாளரை கண்டித்து 100 நாள் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி மன்றத் தலைவராக கவிதா திருமலை உள்ளார்.
இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக முறையாக வேலை வழங்கப்படவில்லை என்றும், இந்த ஆண்டு இதுவரை ஏழு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி தொகை ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்றதாகவும், அதனை திருப்பிக் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
பணித்தளப் பொறுப்பாளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் வீடுகளில் வேலை செய்பவர்களுக்கும் மட்டுமே பணி அட்டை வழங்கப்படுவதாகவும், குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக குறிப்பிட்ட நபர்களே அட்டைகளை மாற்றி மாற்றி பணித்தளப் பொறுப்பாளர்களாக பணியாற்றி வருவதாகவும், இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து வெள்ளக்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்ட 100 நாள் பணியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பணித்தளப் பொறுப்பாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பணித்தளப் பொறுப்பாளர் தனசேகரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சென்ற பணியாளர்கள், அங்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஆய்வுக் கூட்டத்திற்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரிடமும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பணித்தளப் பொறுப்பாளர் மீது சரமாரியாக புகார்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

admin
