பாலாற்றில் பதுக்கி வைத்த 100 யூனிட் மணல் பறிமுதல்! ஏலம் விடுவதில் இருதரப்பினர் மோதல் – ஏலம் ஒத்திவைப்பு!

பாலாற்றில் பதுக்கி வைத்த 100 யூனிட் மணல் பறிமுதல்! ஏலம் விடுவதில் இருதரப்பினர் மோதல் – ஏலம் ஒத்திவைப்பு!

செய்தி: ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தப்பட்டு பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 யூனிட் மணலை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மணலை ஏலம் விடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பினர் மோதிக்கொண்டதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், வெங்கிலி, குளிதிகை உள்ளிட்ட பகுதிகளில் மயில் என்ற மயில் வாகனன் என்பவர் இரவு நேரங்களில் பாலாற்றில் இருந்து மணலை சட்டவிரோதமாக அள்ளி, டிப்பர் லாரிகள் மூலம் பாலூர் மற்றும் திருமலைக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொண்டு சென்று பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மணலை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஏலம் விடுவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து மாதனூர், பாலூர், திருமலைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர் ஏலம் எடுக்க வந்திருந்தனர்.

ஏலம் தொடங்கியபோது, பாலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மணலை ஏலம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், கோயில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மணல் தேவைப்படுவதாகவும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதிகாரிகள் இது பொதுஏலம் என்றும், இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்று ஏலம் எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் காவல்துறையினர் முன்னிலையிலேயே ஒருவரையொருவர் தள்ளிவிட்டு மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, ஏலத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மணலை ஏலம் விடுவது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முறையான அறிவிப்பை வெளியிடாததே இதுபோன்ற பிரச்சினைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.