கசாப்புக் கடையில் வேலைக்கு சேர்ந்த 3 நாட்களில் 25 ஆடுகளை ஆட்டைய போட்ட ஊழியர்! சந்தையில் உரிமையாளரிடம் சிக்கிய பலே திருடன்!

கசாப்புக் கடையில் வேலைக்கு சேர்ந்த 3 நாட்களில் 25 ஆடுகளை ஆட்டைய போட்ட ஊழியர்! சந்தையில் உரிமையாளரிடம் சிக்கிய பலே திருடன்!

செய்தி: ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர்: பர்கூரில் கசாப்புக் கடையில் வேலைக்கு சேர்ந்த மூன்றே நாட்களில் 25 ஆடுகளை திருடிச் சென்று சந்தையில் விற்பனை செய்ய முயன்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரின் (36) மற்றும் அவரது அண்ணன் அத்தாவுல்லா ஆகியோர் பர்கூர் பகுதியில் ஏ1 மட்டன் கடை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கடை திறப்பதற்கான சாவியை உரிமையாளர்கள் கடையின் முன்புறம் வைத்துச் செல்வதை முபாரக் அறிந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உரிமையாளர்கள் வீட்டுக்குச் சென்ற நேரத்தில் கடையின் சாவியை எடுத்த முபாரக், ஆட்டுத் தொட்டியில் இருந்த 25 ஆடுகளை டாடா பிக்கப் வேனில் ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனிடையே, ஆடுகள் காணாமல் போனதை அறிந்த உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் ஜோலார்பேட்டை ஆட்டுச் சந்தைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது உரிமையாளரைப் பார்த்ததும் ஆடுகள் கத்தியதால், முபாரக் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று, ஆடுகளைக் கொண்டு வந்த பிக்கப் வேன் மற்றும் அதன் ஓட்டுநர் ரங்கன், முபாரக்கிற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் பெருமாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

திருடிச் செல்லப்பட்ட 25 ஆடுகளில் 8 ஆடுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், மீதமிருந்த 17 ஆடுகளையும் போலீசார் மீட்டனர்.

இதுகுறித்த புகார் பர்கூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்கள், பிக்கப் வேன் மற்றும் மீட்கப்பட்ட ஆடுகள் ஆகியவை பர்கூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

கசாப்புக் கடையில் வேலைக்கு சேர்ந்த மூன்றே நாட்களில் உரிமையாளருக்கே தெரியாமல் 25 ஆடுகளை திருடிச் சென்று விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது