சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்! முதல்வர் விஜயின் அதிரடி உரை! சர்க்காரியா கமிஷன் முதல் பார்டிபண்டு வரை உடைத்ததால்பரபரப்பு!
ம.பா.கெஜராஜ்,
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.
அப்போது,திமுக ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்களை சுட்டிக்காட்டி அவர் பேசியதால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் விஜய் தனது பதிலுரையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு 1970-களில் நடைபெற்ற வீராணம் திட்டம் தொடர்பான சர்க்காரியா கமிஷன் விசாரணையை சுட்டிக்காட்டினார்.
சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு வீராணம் திட்டத்திற்கான குழாய்கள் தயாரிக்கும் பணி தொடர்பாக டெண்டர் வழங்கப்பட்ட விவகாரத்தில், 2.5 சதவீத கமிஷன் கேட்டதாக முரசொலி மாறன் தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மேலும், “ஊழல் ஆதாரம் சர்க்காரியா கமிஷன் அறிக்கையிலேயே இருக்கிறது” என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 100 பக்க ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களையும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டினார்.
அந்த ஆவணத்தின் அடிப்படையில், 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் கமிஷன் பெறப்பட்டதாகவும், அதன் பயனாளிகளாக அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ரத்தீஷ் என்பவர் புரோக்கராக செயல்பட்டதாகவும், அவர் தற்போது துபாயில் பதுங்கியிருப்பதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் இடமாற்ற விவகாரங்களிலும் அவர் புரோக்கராக செயல்பட்டதாகவும் முதல்வர் விஜய் தனது பதிலுரையில் கூறினார்.
இதனால் திமுக உறுப்பினர்கள் பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகரை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, அவை முன்னவர் செங்கோட்டையன், அவைக் காவலர்களை அழைத்து திமுக உறுப்பினர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். இதன்படி சபாநாயகர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிடும் சூழல் ஏற்பட்டது.
அப்போது முதல்வர் விஜய் குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு அளிக்கலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து சபாநாயகர் அதற்கு அனுமதி அளித்தார்.
எனினும், திமுக உறுப்பினர்கள் தாங்கள் வெளிநடப்பு செய்வதாகக் கூறி பேரவையிலிருந்து வெளியேறினர்.
முதல்வர் விஜய் மேலும் பேசுகையில், “மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், பிராண்ட் உடைக்கப்படும்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும், திமுக இருக்கும் இடத்தில் தவறு இருக்காது என்று மேடைகளில் பேசுவதாகக் குறிப்பிட்ட முதல்வர் விஜய், “திமுக இருக்கும் இடத்தில்தான் தப்பு இருக்கும், தப்பு இருக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த நடவடிக்கைகளின் காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய விவகாரத்தையும் முதல்வர் விஜய் தனது பதிலுரையில் சுட்டிக்காட்டினார்.
“நாற்காலிக்காகவோ, அதிகாரத்துக்காகவோ நான் இந்த இடத்துக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்” என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

admin
