விழிப்புணர்வு பேரணியெல்லாம் நடத்துறீங்க? குப்பையை எப்போது அள்ளுவீங்க!
செய்தி:கு.அசோக்,
வேலூர், செப். 6:வேலூர் மாநகராட்சி சார்பில் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் 260 டாட்டா ஏஸ் வாகனங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி வேலூர் கோட்டை முன்பு நிறைவடைந்தது.
தொடர்ந்து வேலூர் கோட்டை பூங்காவில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்ட நான்கு வகைகளாக குப்பைகளை பிரிப்பது, அவற்றை முறையாக அப்புறப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

பொதுவெளியில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகள் வில்லுப்பாட்டு, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஆனால், வேலூர் மாநகராட்சியின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், “எனது குப்பை எனது பொறுப்பு” என விழிப்புணர்வு பேரணி நடத்துவதுடன் மட்டும் மாநகராட்சியின் பணி முடிந்து விடுமா?
குப்பைகள் தேங்கியுள்ள பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்வதிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

admin
