அரசு அலுவலகத்தில் போராட்டம் நடத்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?ஆட்சியர் அறை வாசலிலேயே வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் அலுவலக அறைக்கு வெளியேயே வருவாய்த்துறை ஊழியர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் போராட்ட நடைமுறைகள் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், 2022 முதல் 2026 வரையிலான முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பட்டியலைத் திருத்தி வெளியிட்டதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டியலைத் தயாரித்து, உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாகவும் மாவட்ட ஆட்சியரின் அலுவலக அறைக்கு வெளியே ஊழியர்கள் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அரசு ஊழியர்களுக்கு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து சங்க ரீதியாக போராடுவதற்கான உரிமை இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அலுவலகமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உட்பகுதியில், அதுவும் மாவட்ட ஆட்சியரின் அலுவலக அறைக்கு வெளியிலேயே அமர்ந்து தர்ணா நடத்துவது சரியான நடைமுறையா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க வரும் முக்கிய அரசு அலுவலகமாகும்.
பணிச்சுமை மிகுந்த நிலையில் செயல்படும் மாவட்ட ஆட்சியரின் அலுவலக அறையை ஒட்டி போராட்டம் நடத்தப்படுவது, அலுவலகப் பணிகளுக்கும் பொதுமக்களின் அன்றாட அலுவல் நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறதா என்பதையும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராட வேண்டுமெனில், நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி உரிய அனுமதி பெற்று, அரசு அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உட்பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா, அரசு அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.
விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் கொடிகள் வைக்கப்பட்டிருந்ததை அறிவோம்.
அரசு அலுவலக வளாகத்தில் சங்கங்களின் கொடிகள் மற்றும் அடையாளங்கள் வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன என்பது குறித்து முந்தைய ஆட்சியர் மரியாதைக்குரிய வே.இரா.சுப்புலட்சுமி,இ.ஆ.ப அவர்களிடம் பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப்பிய போது, அனைத்து கொடிகளும் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளிருந்து அகற்றப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். தக்கதாகும்”.

அரசு ஊழியர் என்ற தகுதி, அரசு அலுவலகத்தின் எந்தப் பகுதியிலும் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியாக கருதப்படக்கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் விளக்கம் வெளியிடப்பட்டால், அது வெளியிடப்படும்.

admin
