“கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டியிட்டாலும் தவெகவுக்கு பின்னடைவு இல்லை!” – அமைச்சர் செங்கோட்டையன்!

“கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டியிட்டாலும் தவெகவுக்கு பின்னடைவு இல்லை!” – அமைச்சர் செங்கோட்டையன்!

செய்தி:ஜி.குலசேகரன்,

வேலூர் மாவட்டம், வேலூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தவெக ஆட்சியில் முதல்வர் அறிவித்தபடி, மக்களின் வரிப்பணம் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து அரசு திட்டங்களும் மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அண்ணா, எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவுகளை நிறைவேற்றும் வகையில், முதல்வர் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்தார்.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன.

விவசாயிகளின் நிலையும் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது பல மடங்கு மேம்பட்டுள்ளது.

அரசைப் பொறுத்தவரை அனைவரும் அனைத்தையும் பெற வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

நில வரி முழுமையாக ரத்து

நில வரியைப் பொறுத்தவரை, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த நில வரி தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.28 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், விவசாயிகளுக்கு இது மிகுந்த பயனளிக்கும்.
முன்பு ஜமாபந்தி காலங்களில் நில வரி வசூலிப்பது வருவாய்த்துறைக்கு முக்கியப் பணியாக இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் நில வரியை மட்டுமே முக்கிய வருவாயாகக் கொண்டு அரசு செயல்பட்டது.

தற்போது கட்டிட வரி, குடிநீர் வரி, உள்ளாட்சி வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுவதால் நில வரி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

வருவாய்த்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிநவீன கருவிகள் வாங்கப்பட உள்ளன. மேலும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நில அளவையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு பட்டாக்களை விரைவாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பஞ்சமி நிலங்களைப் பொறுத்தவரை, அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்யும் உரிமை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டியிட்டாலும் பின்னடைவு இல்லை

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “அவர்களது கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அவர்கள் தனித்து போட்டியிடுவதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை” என்றார்.

முதல்வரின் லண்டன் பயணம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்வார்கள். சொல்வது எளிது; செயல்படுத்திப் பார்ப்பதுதான் கடினம்.

ஒருவர் தொழில் தொடங்குவதற்கு மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்க வேண்டும்.

திட்டங்களைப் பற்றி பேசுவது எளிது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன” என்றார்.

பேட்டியின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்து,சுதாகர், வினோத்கண்ணா ஆகியோர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.