“சேகர்பாபுவுக்கு தகுந்த நேரத்தில் தக்க பாடம் புகட்டப்படும்!அமைச்சர் ரஞ்சித் குமார் ஆவேசம்
செய்தி: ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட செயலாளருமான டாக்டர் ந.திருப்பதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டார்.
இதில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் ரஞ்சித் குமார் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பதிலடி கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழக முதல்வர் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாக கூறப்படும் கருத்துகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரஞ்சித் குமார், “முதல்வரைப் பற்றி சேகர்பாபு அவதூறாக பேசினால், அவருக்கு தகுந்த நேரத்தில் தக்க பாடம் புகட்டப்படும்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற 100 நாள் சாதனை விளக்க நிகழ்வில், ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சினிமா துறையில் உச்சத்தில் இல்லாத காலகட்டத்தில்தான் பலர் அரசியலுக்கு வருவார்கள். ஆனால், தமிழக முதல்வர் விஜய் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தபோதே அரசியலுக்கு வந்தவர்.
இரண்டரை ஆண்டுகள் கட்சியை நடத்தி, எம்.எல்.ஏ.வாக இல்லாமலேயே நேரடியாக மக்களால் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்றும் அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக இணைந்துள்ளவர்கள் எந்தவித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“நான் அம்மா ஆட்சியில் அ.தி.மு.க.வில் இருந்தவன். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அரசியலில் எந்தப் பக்கம் செல்வது என தெரியாமல் இருந்தபோது, தளபதி விஜய் அவர்களை நோக்கிச் சென்றேன்.
அதன் காரணமாக இன்று என்னை எம்.எல்.ஏ.வாகவும், வனத்துறை அமைச்சராகவும் உயர்த்தியுள்ளார்.
அதேபோல், உங்களுக்கும் எதிர்காலத்தில் உயர்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். நீங்களும் அரசியலில் உச்சத்தைத் தொடுவீர்கள்” என்று அமைச்சர் பேசினார்.
மேலும், திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகிகள் மூலம் மனுக்களாகப் பெற்று தன்னிடம் வழங்கினால், அவற்றை உரிய முறையில் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.சி.முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், முருகன், நகர செயலாளர் அச்சுதன், விமல்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

admin
