ரூ.50 ஆயிரம் கல்விக் கட்டண நிலுவை: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு சான்றிதழ்கள் வழங்க மறுப்பு?! உயர் கல்வி பாதிக்கப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவன் புகார்!
ஜி. குலசேகரன்,
வேலூர், ஆக.24: தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றும், கல்விக் கட்டணம் நிலுவையில் இருப்பதாகக் கூறி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை என மாணவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
வேலூர் சத்துவாச்சாரியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், தொரப்பாடியைச் சேர்ந்த ஷர்வேஸ் என்ற மாணவர் இந்த மனுவை அளித்தார்.
மாணவர் தனது மனுவில், ஓட்டேரியில் உள்ள செவன்த் டே தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்ததாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தற்போது பெற்றோரால் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், சுமார் ரூ.50 ஆயிரம் கட்டண நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்துவதாக உறுதியளித்தும், பள்ளி நிர்வாகம் தனது மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை வழங்கவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனால் தனது உயர்கல்வி தொடர்வதில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி நிர்வாகத்திடம் இருந்து தேவையான கல்விச் சான்றிதழ்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷிடம் மாணவர் மனு அளித்தார்.
குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடாது என்றும், மாணவனின் உயர்கல்விக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin
