முகமூடி... கையுறை... பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி! வீட்டுக்குள் சிக்கிய இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார்
செய்தி: கு.அசோக்
ராணிப்பேட்டை: திமிரி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை உறவினர் ஒருவர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வரகூர்பட்டி கொள்ளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான மாசிலாமணி. விவசாயியான இவர், நேற்று மாலை குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இரவு சுமார் 10 மணியளவில் மாசிலாமணியின் வீட்டில் இருந்து சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாசிலாமணி, தனது அண்ணன் மகன் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்து வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
உடனடியாக அங்கு சென்ற சீனிவாசன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் தொடர்ந்து சத்தம் கேட்டதால் உள்ளே சென்று பார்த்தபோது, முகமூடி மற்றும் கையுறை அணிந்த நபர் ஒருவர் பீரோக்களை உடைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவரை சீனிவாசன் கையும் களவுமாக பிடித்துள்ளார். பின்னர் முகமூடியை அகற்றி பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜ்குமாரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 2 சவரன் தங்க நகைகள் காணவில்லை என மாசிலாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, முகமூடி மற்றும் கையுறை அணிந்து ராஜ்குமார் வீட்டிற்குள் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முகமூடி அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
