இரயில்வே ஏ.சி.யை லபக்கிய கில்லாடிகள்!

இரயில்வே ஏ.சி.யை லபக்கிய கில்லாடிகள்!

கு.அசோக்,

 அரக்கோணம் அருகே ரயில் நிலையத்தில் செம்பு கம்பி, ஏசி திருட்டு: காயலான் கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது.

 இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள சித்தேரி ரயில் நிலையத்தில் சிக்னல் அறையில் இருந்து செம்பு கம்பிகள் மற்றும் குளிர்சாதன பெட்டி திருடப்பட்ட சம்பவத்தில் காயலான் கடை உரிமையாளர் உள்பட 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

   கடந்த 22-ஆம் தேதி சிக்னல் அறையில் இருந்த சுமார் 15 மீட்டர் நீளமுள்ள செம்பு கம்பி திருடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 30-ம் தேதி மீண்டும் அதே இடத்தில் இருந்து 30 மீட்டர் செம்பு கம்பி மற்றும் வோல்டாஸ் நிறுவன குளிர்சாதன பெட்டி திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

   இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வல்லீஸ்வர ராவ் தலைமையில், ஆய்வாளர்கள் செந்தில்குமார் மற்றும் நவீன்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

   விசாரணையின்போது அரக்கோணம் - திருத்தணி ரயில் மார்க்க மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்ததில், சித்தேரி ரயில் நிலையத்தில் இருந்து மொத்தம் 45 மீட்டர் செம்பு கம்பி மற்றும் குளிர்சாதன பெட்டியை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

  இதையடுத்து வாணியம்பேட்டையைச் சேர்ந்த அஜித் (25), நாகவேடு பகுதியை சேர்ந்த விஸ்வநாத் (25), அல்லிப்பந்தாங்கலைச் சேர்ந்த முருகன் (29) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.மேலும், திருடப்பட்ட செம்பு கம்பிகளை திருத்தணி பகுதியில் உள்ள காயலான் கடையில் விற்றதாக அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தக் கடையின் உரிமையாளர் ரத்தினசாமியையும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

  ஒரே ரயில் நிலையத்தில் குறுகிய இடைவெளியில் இரண்டு முறை திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பது ரயில்வே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.