சிறுமியை சீரழித்த கிழவன்களுக்கு பத்து ஆண்டு சிறை தண்டனை! ராணிப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்தி:கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 72 மற்றும் 81 வயதுடைய இரு முதியவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வாலாஜா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 13 வயது சிறுமி, தனது அண்ணனுடன் வசித்து வந்தார். அருகிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு, 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உறவினர்கள் சிறுமியை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வாலாஜா போலீஸார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த காதர் பாஷா (72), ஆனப்பன் (81) ஆகிய இருவரும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட காதர் பாஷா மற்றும் ஆனப்பன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

admin
