“பாரதிதாசனுக்கு ரூ.48.22 லட்சம் வழங்கிய அரசு! உதவித்தொகை விவகாரத்தில் வெளியான கணக்கு”!
செய்தி: ம.பா. கெஜராஜ்
மலேசியாவில் முனைவர் பட்டம் (Ph.D.) படித்து வரும் மாணவர் பாரதிதாசனுக்கு தமிழக அரசு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகையை வழங்கவில்லை என சமூக வலைதளங்களில் வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் அரசிடம் விளக்கம் கோரின.
இந்நிலையில், மாணவர் பாரதிதாசனுக்கு இதுவரை பல்வேறு தவணைகளில் ரூ.48,22,097 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சமூகநீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் Tissue Engineering and Regenerative Medicine பிரிவில் Ph.D. படித்து வரும் பாரதிதாசனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்ட விதிகளின்படி ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை வழங்கப்படும் நிலையில், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி இதுவரை ரூ.48.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
முதல் ஆண்டு கல்வி, வாழ்க்கைச் செலவு மற்றும் ஆராய்ச்சிச் செலவுகளுக்கான தொகைகள் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் ஆண்டு படிப்புக்காக பல்கலைக்கழகக் கல்விக் கட்டணமாக ரூ.5.57 லட்சமும், வாழ்க்கைச் செலவினமாக ரூ.6.65 லட்சமும், மொத்தம் ரூ.12.22 லட்சம் அளவுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட நிதிக்கான உரிய செலவின ஆவணங்கள் மற்றும் பயன்பாட்டு விவரங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் சமூகநீதித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மாணவர் தரப்பில் தற்போதைய கல்வி மற்றும் ஆராய்ச்சிச் செலவுகளுக்கான நிதி நிலுவையில் இருப்பதாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது.
அரசு தரப்பில் இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளதாக தற்போது கணக்குடன் விளக்கம் வெளியிடப்பட்டிருப்பது, “பாரதிதாசனுக்கு அரசு எந்த நிதியும் வழங்கவில்லை” என்ற பொதுவான தகவலுக்கு மாறான நிலையை காட்டுகிறது

உண்மையில், அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளும் நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை குறித்த விவரங்களை அவ்வப்போது வெளிப்படையாக ஊடகங்களிடம் தெரிவிப்பது அவசியமாகிறது.
அவ்வாறு உரிய நேரத்தில் தகவல்கள் வெளியிடப்படாதபோது, முழுமையான பின்னணி தெரியாமல் ஒரு தரப்பு தகவல் மட்டுமே பொதுவெளியில் பரவி அரசியல் சர்ச்சைக்கும் வழிவகுக்கிறது.
இந்த விவகாரத்தில் தற்போது அரசு வெளியிட்டுள்ள தொகை விவரங்கள், அரசின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
மேலும், நடப்பு கல்வியாண்டில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 362 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
மாணவர் தரப்பின் தற்போதைய கோரிக்கை மற்றும் அரசு தரப்பில் வழங்கப்பட்டதாக கூறப்படும் தொகை, நிலுவையில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

admin
