திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி திடீர் மாற்றம்! காரணம் என்ன?  புது எஸ்.பி.ஆக டாக்டர் கே.பாலகிருஷ்ணன் நியமனம்!

திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி திடீர் மாற்றம்! காரணம் என்ன?  புது எஸ்.பி.ஆக டாக்டர் கே.பாலகிருஷ்ணன் நியமனம்!

 ம.பா.கெஜராஜ்,

 திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி திடீர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை சைபர் கிரைம் பிரான்ச் எஸ்.பியாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப.வு க்கு பதிலாக இவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 இந்நிலையில் சிபி சக்கரவர்த்திக்கு பதிலாக டாக்டர் கே.பாலகிருஷ்ணன் திருப்பத்தூரின் எஸ்.பி. யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட 90 நாட்களில் சிபி சக்கரவர்த்தியை மாற்ற காரணம் என்ன என்பது குறித்து பட்டி மன்றமே நடந்து வருகிறது.

 அது பற்றி "லைவ்லுக்"கிற்கு கிடைத்த தகவல்கள் யாதெனில், திருப்பத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது எஸ்.பி.யாக எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, இ.கா.ப. அவர்கள் கடந்த 10.06.2021 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

  சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சற்று கடுமையாகவே கையாண்ட அவர் மீது சமூக விரோதிகள் பல்வேறு வதந்திகளை பரப்பினார்கள்.அவற்றையெல்லாம் பொறுமையாக டீல் செய்த அவருக்கு மணல் திருடர்கள் வடிவில் பூதாகர பிரச்சனை வெடித்தது.

  திருப்பத்தூர் டி.எஸ்.பி. கந்திலி மற்றும் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர்கள் செயற்கை மணல் திருடன்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அதற்காக எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியின் பெயரை தாராளமாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது மேற்படி காவல் அதிகாரிகள் செய்து வந்த தில்லாலங்கடி வேலைகளுக்கு எஸ்.பி.யின் பெயர் உருட்டப்பட்டதாக சொல்கிறார்கள்.

 இது போன்ற ஐடியாக்களை கையாள அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகளே  காரணம் என்று தகவல்கள் பரவவே, ஆளுங்கட்சி தரப்பில் கடுப்பானார்கள்.

 இந்நிலையில் திருப்பத்தூர் வட்டம் காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் என்பவரை மையப்படுத்தி சர்ச்சை எழுந்துள்ளது.

 ஏனெனில் அவரும், அவரது சகோதரர் சுரேஷ் என்பவரும் கடந்த பத்து ஆண்டுகளாக மணல் திருடன்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திவருகிறார்கள். குறிப்பாக செயற்கை மணல் திருடன்களை சட்டபடி ஒடுக்க முயன்று பல்வேறு வழக்கை சந்தித்து வருகிறார்கள்.

 இப்படியிருக்க, இது தொடர்பாக வழக்கறிஞர் சரவணன் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியை நேரில் சென்று சந்தித்து நியாயம் கோரியிருக்கிறார். அந்த சந்திப்பு மிகவும் காரசாரமாக முடிந்துவிட்டது.

 அதன் பின்னர் வழக்கறிஞர் சரவணன் இது குறித்து தமிழக முதல்வருக்கு கடந்த 12.08.2021 ஆம் தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.

  அதில், அ.தி.முகவினரின் மணல் திருட்டு அராஜக செயலை எதிர்த்தும் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தோம், குறிப்பாக கடந்த ஆட்சிகாலங்களில் திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்ந்த பகுதிகளில் துலா நதி மற்றும் அதை ஒட்டி உள்ள சுடுகாடு மற்றும் விவசாய நிலங்களிலும் அ.தி.மு.கவினர் வருவாய் துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து மணல் கடத்தி வந்தனர்.

  அது தற்போதும் தொடர்கிறது. இதற்கு  தற்போதைய மாவட்ட காவல் அதிகாரியே காரணம் என்று போட்டுடைத்துள்ளார்.

  கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் மட்டும் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு கைமாறியுள்ளது எனவும் பல விவரங்களை வழக்கறிஞர் அவரது புகாரில் அடுக்கியிருந்தார்.

  இந்த புகார் கடந்த மாதம் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது எஸ்.பி.மாற்றலாகியிருப்பதற்கு இதுவே காரணம் என்றாலும் கூட, வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சியின் பிரமுகர் வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட விவகாரமே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

 வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை சம்பவம் நடந்த 10.09.2021 ஆம் தேதி நடந்தது. அந்த தேதியில் எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி, இராமநாதபுரத்தில் நடந்த இம்மானுவேல் சேகரனார் நினைவு தின நிகழ்ச்சி பாதுகாப்பு பணியில் இருந்தார்.

  அவர் மாவட்டத்தில் இல்லாத போது நடந்த கொலைக்கு எப்படி பொறுப்பாக இயலும் என்று சில விணா எழுப்புகிறார்கள். அதற்கு காவல் அதிகாரிகளிடம் பதில் உள்ளது.

  எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியை பொறுத்தமட்டில் செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படும் மூலாதாரங்களை முற்றிலும் அழித்தார். அதே போல் வாணியம்பாடி பகுதியில் பெரிய அளவில் கஞ்சா பதுக்கல் மற்றும் கூலிப்படை நடத்திவந்த கும்பலை பிடித்து அங்கு இயல்பான சூழலை கொண்டு வந்தார்.

  கஞ்சா, பட்டா கத்திகள், செல்போன்கள் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த நால்வர் கைது என்று பரபரப்பாக பேசப்பட்டு பின்னர் அடங்கி போனது அந்த விவகாரம்.

  இருந்த போதும் 26.07.2021 ஆம் தேதி நடத்திய இந்த மெகா ஆபரேஷனில் இக்கூட்டத்தின் தலைவன் டீல் இம்தியாசை பிடிக்க இயலாமல் இருந்தது.

 அப்படி அவரை பிடித்து சிறையில் அடைத்திருந்தால், வாணியம்பாடி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது மாநில அளாவிளான காவல் அதிகாரிகளின் எண்ணம்.

  ஆக, இதுவே மாறுதலுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

  மேற்படி சிபி சக்கரவர்த்தி மாறுதல் செய்யப்பட்டதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட  பின்னர், மேலும் ஒன்பது ஐ.பி.எஸ். (ஏ.எஸ்.பி.கள்) அதிகாரிகளையும் மாற்றி கூடுதல் தலைமைச்செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

  இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் மூன்றாவது எஸ்.பி.யாக பொறுப்பேற்கும் டாக்டர்.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் திறம்பட செயல்படுவார் எனவும், கிரைம் டிஸ்ட்ரிக்ட் என்று பெயர் பெற்ற திருப்பத்தூரை சீர் மிகு மாவட்டமாக மாற்றுவார் என்று மக்கள் நம்புகிறார்கள்.